கொரோனா எப்படி தோன்றியது என அரிய 2 வருடங்கள் ஆகும் – ரஷ்ய விஞ்ஞானி தகவல்
கொரோனா வைரஸ் முதன்முதலில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள விலங்குகள் சந்தையில் இருந்து கொரோனா உருவாகி இருக்கலாம் என்றும், வுகானில் உள்ள வைரஸ் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கியபோது கசிந்து பரவி இருக்கலாம் என்றும் பேசப்பட்டது.
இதுபற்றி விசாரணை நடத்த உலக சுகாதார நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, கடந்த ஜனவரி மாதம் சீனாவுக்கு சென்றது. அவர்கள் விலங்குகள் சந்தையையும், வைரஸ் ஆய்வுக்கூடத்தையும் நேரில் பார்த்து ஆய்வு செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில், வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்கு கொரோனா பரவியதாக கூறப்பட்டு இருந்தது. வைரஸ் ஆய்வுக்கூடத்தில் இருந்து கசிய வாய்ப்பு இ்ல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அந்த அறிக்கை திருப்தி அளிக்காததால், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கொரோனா தோன்றியது எப்படி என்று விசாரித்து அறிக்கை அளிக்குமாறு அமெரிக்க உளவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
இந்தநிலையில், ரஷிய அறிவியல் அகாடமி உறுப்பினரும், நோவோசிபிர்ஸ்க் மாகாண பல்கலைக்கழக ஆய்வுக்கூடத்தின் தலைவருமான செர்ஜி நேட்சோவ் கூறியதாவது:-
கொரோனா எப்படி தோன்றியது என்பதை துல்லியமாக கண்டறிய நிறைய ஆய்வு செய்ய வேண்டும். இது மிக அரிய இயற்கை நிகழ்வு. விலங்கிடம் இருந்து எப்படி மனிதர்களுக்கு பரவியது என்ற மர்மத்தை கண்டறிய பலநாட்டு நிபுணர்களும் பாடுபட்டு வருகிறார்கள்.
அமெரிக்காவிலும் விசாரணை நடந்து வருகிறது. எந்தெந்த விலங்குகளில் கொரோனா வைரஸ் வாழக்கூடும் என்று பார்த்து ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. எனவே, இதற்கு நாள் கணக்கில் இல்லாமல், மாதக்கணக்கில் ஆகும். ஒரு வருடமோ, 2 வருடமோ ஆகலாம் என்றார்.