X

கொரோனா அறிகுறி – திருச்சியில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி புத்தூரில் உள்ள தலைமை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் பாதிப்பு சிகிச்சைக்காக சிறப்பு வார்டு கடந்த மாதம் ஏற்படுத்தப்பட்டது. திருச்சியில் விமான நிலையம் இருப்பதால் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் விமான நிலையத்திலேயே மருத்துவகுழுவால் பரிசோதிக்கப்படுகிறார்கள்.

அதில் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறிக்கான சளி, இருமல், மூச்சுதிணறல் இருப்பது தென்பட்டால் அவர்கள் உடனே தனி வாகனத்தில் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

கடந்த 30 நாட்களில் 12 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். கடந்த புதன்கிழமை இரவு மலேசியாவில் இருந்து விமானத்தில் திருச்சி வந்த புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பரம்பூர் கிராமத்தை சேர்ந்த இஷா அனிபா என்ற 2 வயது குழந்தை மற்றும் புளியம்பட்டி பொன்னுசாமி ஆகியோர் சளி, காய்ச்சல் தொற்று அறிகுறியுடன் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

குழந்தையின் சளி மற்றும் ரத்தம் பரிசோதனைக்காக ஆய்வு கூடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. 2 நாட்கள் சோதனைக்கு பிறகு குழந்தை இஷாஅனிபாவிற்கு கொரோனா வைரஸ் தாக்குதல் அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து குழந்தையை பெற்றோரிடம் கொடுத்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து புளியம்பட்டி பொன்னுசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று திருச்சி புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் கல்லூரி மாணவர் ஒருவர் சளி, காய்ச்சல் அறிகுறியுடன் அரசு ஆஸ்பத்திரி தனிவார்டில் அனுமதிக்கப்பட்டார். தனது சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று விட்டு திரும்பியபோது காய்ச்சல் ஏற்பட்டதால் கல்லூரி விடுதியில் இருந்து உடனே அவர் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார்.

அதேப்போன்று திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து பயணிகள் கொண்டு வரும் பொருட்களை சோதனை செய்யும் சுங்க இலாகா உதவி ஆணையர் ஒருவரும் கொரோனா நோய் அறிகுறி பாதிப்புடன் நேற்று அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானம் வழியாக வரும் பயணிகளுக்கு நடத்தப்படும் சோதனையில் மட்டுமே அறிகுறிகள் கண்டறியப்படும் நபர்கள் இதுவரை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர். இந்தநிலையில் முதல் முறையாக திருச்சி சுங்க இலாகா உதவி ஆணையர் ஒருவரும், கேரளா சென்று திரும்பிய கல்லூரி மாணவர் ஒருவரும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: south news