உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு இன்னும் தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாததால் அதன் பரவலை கட்டுப்படுத்த முடியவில்லை. கிட்டத்தட்ட 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரசுக்கு காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வறட்சி ஆகியவை அறிகுறிகளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொரோனா வைரசின் அறிகுறிகளாக வாசனை மற்றும் சுவை இழப்பதும் முக்கியமானதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தலைவலி, மயக்கம், சோர்வு, உடல்வலி ஆகியவையும் அறிகுறிகளாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா வைரசுக்கு காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு ஆகியவை அறிகுறிகளாக இருந்தாலும் சுவை மற்றும் வாசனை அறியும் தன்மையை இழப்பதுதான் நம்பகமான அறிகுறி என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து லண்டனில் வெளியாகும் பிளாஸ் மெடிசன் என்ற மருத்துவ இதழில் வெளியான ஆய்வு கட்டுரையில் கூறி இருப்பதாவது:-
திடீரென வாசனை மற்றும் சுவை அறியும் தன்மையை இழந்ததாக கூறியவர்களில் 78 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் 40 சதவீதம் பேருக்கு காய்ச்சலோ, இருமலோ இல்லை.
வாசனை, ருசி திடீரென தெரியாவிட்டால் உடனடியாக தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
இதுகுறித்து லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ரேச்சல் பேட்டர்ஹம் கூறியதாவது:-
கொரோனா 2-ம் அலை தொடங்கி உள்ளதாக கூறப்படும் சூழ்நிலையில் தொற்று பரவலை தடுப்பதில் இந்த ஆய்வு தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
பல நாடுகள் காய்ச்சல் மற்றும் இருமலையே கொரோனாவுக்கான முக்கிய அறிகுறிகளாக கருதுகின்றன. ஆனால் வாசனை, சுவை அறியும் தன்மையை இழப்பதையே பிரதான அறிகுறிகளாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.