கொரோனா அச்சம் – ஏசி ரயில் பெட்டிகளில் போர்வைக்கு தடை
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக அதிக அளவில் மக்கள் பயணம் செய்யும் ரெயில்களை தீவிரமாக பராமரிக்க உத்தரவிட்டுள்ளனர்.
அதன்படி தொலைதூர ரெயில் பெட்டிகள் முழுமையும் கிருமி நாசினிகளால் சுத்தம் செய்யப்படுகிறது. பயணிகளின் இருக்கைகள், கைப்பிடிகள் கிருமி நாசினிகளால் துடைக்கப்படுகிறது.
ஏ.சி.பெட்டிகளில் ஜன்னல்கள் மற்றும் பக்கவாட்டில் திரைசீலைகள் இருக்கும். அதை தற்காலிகமாக அகற்றிவிட்டனர்.
ஜன்னல் ஓரங்களில் திரைச்சீலை அகற்றப்பட்டதால் பகல் நேரங்களில் வெப்பம் அதிகமானால் அதற்கேற்ப ஏ.சி.யை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் பயணிகளுக்கு போர்வைகள் மற்றும் தலையணைகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏ.சி. பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் சொந்த போர்வைகளை எடுத்துச்செல்லும்படி ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரவு நேரங்களில் பயணிகள் குளிரை தாங்கும் வகையில் ஏ.சி.யை தேவைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தும்படி கூறப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் அந்த மாநிலங்களுக்கு ரெயில் பயணத்தை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
பலர் தங்கள் பயணங்களை ரத்து செய்ய தொடங்கி இருக்கிறார்கள். சென்னை-பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், ஐதராபாத் செல்லும் ரெயில்களிலும் அடுத்த வாரம் சீட்கள் காலியாக உள்ளன.
வழக்கமாக இந்த ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது அரிதானது. அந்த அளவு கூட்டம் அலைமோதும்.