Tamilசெய்திகள்

கொரோனாவுக்கு முன்பு இருந்தது போல் பெட்ரோல் தேவை அதிகரிப்பு

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு வாகன நடமாட்டம் குறைந்தது. இந்தியாவின் எரிபொருள் தேவை, நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைந்தது.

கடந்த மார்ச் மாதம், பெட்ரோல் பயன்பாடு, கொரோனாவுக்கு முன்பு இருந்த இயல்புநிலையை நெருங்கியது. இருந்தாலும், கொரோனா இரண்டாவது அலை காரணமாக, கடந்த மே மாதம் மீண்டும் எரிபொருள் பயன்பாடு குறைந்தது. ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால், ஜூன் மாதம் எரிபொருள் பயன்பாடு அதிகரிக்க தொடங்கியது.

இந்தநிலையில், கடந்த ஜூலை மாதம் பெட்ரோல் பயன்பாடு மேலும் அதிகரித்தது. மொத்தம் 23 லட்சத்து 70 ஆயிரம் டன் பெட்ரோல் உபயோகிக்கப்பட்டது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகம்.

கொரோனாவுக்கு முன்பு, அதாவது கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் 23 லட்சத்து 90 லட்சம் டன் பெட்ரோல் விற்பனை ஆகியிருந்தது. அதே நிலையை தற்போது எட்டியுள்ளது.

கடந்த மாதம் 54 லட்சத்து 59 ஆயிரம் டன் டீசல் விற்பனை ஆகியுள்ளது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 12.36 சதவீதம் அதிகம். ஆனால், 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 10.9 சதவீதம் குறைவு. தீபாவளிக்குள் டீசல் விற்பனையும் கொரோனாவுக்கு முன்பிருந்த நிலையை எட்டும் என்று இந்திய எண்ணெய் கழக தலைவர் வைத்யா தெரிவித்துள்ளார்.

விமானங்கள் முழுமையாக இயக்கப்படாததால், விமான எரிபொருள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், சமையல் எரிவாயு பயன்பாடு, ஊரடங்கு காலத்திலும் அதிகரித்தே வருகிறது.