உலகையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நம்மை தொற்றி கொள்ளாமல் எப்படி காப்பாற்றிக்கொள்வது என்று ஒவ்வொருவரும் தவிக்கின்றனர்.
ஆனால் சுய கட்டுப்பாடு மூலம் கொரோனா எத்தனை முறை எவ்வளவு வீரியமாக தாக்க வந்தாலும் காக்க முடியும் என்பதை உலகிற்கே எடுத்துக்காட்டி இருக்கிறார்கள் ஒரு சிறிய கிராமவாசிகள்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஜி கொண்டுரு மண்டலத்தில் உள்ள சிறிய கிராமம் துக்கிரிலப்பாடு.
கிராமத்தை விட்டு அடிக்கடி வெளியே செல்வதற்கும், வெளியூர் மக்கள் கிராமத்திற்குள் நுழைவதற்கும் இவர்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இங்கு வசிக்கும் அனைவரும் முகக்கவசம் அணியாமலோ, சானிடைசரை எடுத்துக் கொள்ளாமலோ வீட்டில் இருந்து வெளியே செல்வதில்லை.
மேலும் சுகாதாரப் பணியாளர்கள் கிருமிநாசினி அடித்தல் மற்றும் சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலை தெளித்தல் ஆகிய பணிகளை வாரம் இருமுறை மேற்கொள்கின்றனர். கிராமத்தில் உள்ள வடிகால்கள் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படுகின்றன.
“எங்கள் கிராமத்தில் எட்டு கடைகள் உள்ளன. கூட்டம் சேர்வதைத் தடுக்க, ஒரு கடையில் குறிப்பிட்ட நாளில் ஒரு வார்டு மக்கள் மட்டுமே பொருள்களை வாங்க வேண்டும் என்று வரையறுத்துள்ளோம்” என்கிறார்கள் ஊர்மக்கள்.
மக்கள் கூடுவதை தவிர்ப்பதற்காக கிராமத்தில் எந்தவொரு திருவிழா, விசேஷங்கள், நிகழ்ச்சிகள், சடங்குகள் எதுவும் நடத்த வேண்டாம் என்று இந்த கிராம மக்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். கொரோனா காலத்தில் அண்டை கிராமங்களில் வசிக்கும் உறவினர்களின் விசேஷங்களில்கூட இந்த கிராமத்தினர் கலந்து கொள்வதில்லை. இதுபோன்ற சுயகட்டுப்பாட்டு நடவடிக்கைகளாலேயே இந்த கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.