கொரோனாவுக்காக வைகை அணை மூடப்பட்டது!
தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க உரிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக, கேரள எல்லையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். குமுளி, கம்பம் மெட்டு சோதனைச்சாவடியில், ஊராட்சி, சுகாதாரம், பொது மருத்துவம், சுங்கத்துறை, காவல்துறை இணைந்து இந்த பணியினை மேற்கொண்டு வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து தமிழகத்தின் கூடலூர், கம்பம் வழியாக பேருந்துகள், வாகனங்கள் மூலம் வருபவர்களிடம் கொரோனா வைரஸ் தாக்கம் உள்ளதா என அவர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேனி மாவட்டத்தில் 1958-ம் ஆண்டு கட்டப்பட்ட வைகை அணை 62 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக மூடப்பட்டது. இதுகுறித்த உத்தரவை பொதுப்பணித்துறையினர் வைகை அணை முகப்புக் கதவில் ஒட்டி பூட்டுப் போட்டு மூடியுள்ளனர். வைகை அணை மூடப்பட்டது தெரியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வைகை அணை மூடப்பட்டதால் அங்குள்ள வலது கரைப்பூங்கா, இடது கரைப் பூங்காக்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வைகை அணையில் உள்ள உணவு விடுதிகளும், கடைகளும் திறக்கப்பட வில்லை. வைகை அணை நீர்த் தேக்கப் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்றுவிடாமல் தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை மற்றும் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹைவேவிஸ்மேகமலை சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மலை அடிவாரத்திலுள்ள வனத்துறை சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
ஆண்டிபட்டி அருகே உள்ள சின்னசுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த அருவிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதால், கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதால், குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசு அடுத்த உத்தரவிடும் வரையில் இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் மேகமலை வனச்சரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம் மெட்டு, குமுளி, போடிமெட்டு வழியாக இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர். இந்நிலையில், கேரளத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கேரளத்தில் உள்ள ஏலக்காய் தோட்டங்களுக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அறிகுறிகள் குறித்து கட்டுப்பாட்டு அறை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, அலுவலக எண் 04546 261093 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பல்லவிபல்தேவ் எச்சரித்துள்ளார்.