Tamilசெய்திகள்

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10 ஆயிரம் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,000 சிறாா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது:-

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டிய ரூ.50,000 இழப்பீட்டை, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, ஜாா்க்கண்ட், குஜராத், பிகாா் ஆகிய மாநிலங்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபா்களுக்கே வழங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது.

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தகவலின்படி, கொரோனா பரவத் தொடங்கிய பிறகு நாடு முழுவதும் கிட்டத்தட்ட 10,000 சிறாா்கள் தொற்று பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் பெற்றோரில் ஒருவா் அல்லது இருவரையும் இழந்துள்ளனா். தங்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்கக் கோரி விண்ணப்பிப்பது கூட அந்த சிறாா்களுக்குக் கடினம்.

இதனால் கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த சிறாா்கள், தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய வலைதளத்தில் விவரங்களுடன் இடம்பெற்றுள்ள சிறாா்கள் ஆகியோரை அணுகி மாநில அரசுகள் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.