கொரோனா வைரஸ் பெருந்தொற்று, குழந்தைகளைத் தாக்குகிறபோது அவர்களுக்கான சிகிச்சை, பராமரிப்பு எப்படி அமைய வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்:-
* கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளான பெரியவர்களுக்கு தரக்கூடிய ஐவர்மெக்டின், ஹைட்ராக்சிகுளோரோகுயின், பேவிபிராவிர், டாக்சிசைக்ளின் அல்லது அஜித்ரோமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை குழந்தைகளுக்கு தொற்று வராமல் தடுக்கவோ, சிகிச்சையின்போது அளிக்கவோ பரிசோதிக்கப்படவில்லை. எனவே அவற்றை குழந்தைகளுக்கு அளிக்க பரிந்துரைக்கப்படவில்லை.
* கொரோனாவின் 2-வது அலையின்போது, வெவ்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்த தினசரி அதிகபட்ச பாதிப்புகளின் அடிப்படையில், எதிர்காலத்தில் குழந்தைகள் பராமரிப்புக்கான கூடுதல் படுக்கைகளை கணக்கிட வேண்டும்.
* கடுமையான கொரோனா பாதிப்பில் உள்ள குழந்தைகளுக்கு பராமரிப்பு வழங்குவதற்காக தற்போதுள்ள கொரோனா பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும். இதற்கு குழந்தைகள் சார்ந்த உபகரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகளை கூடுதலாக ஏற்படுத்த வேண்டும்.
* பயிற்சி பெற்ற டாக்டர்கள், நர்சுகள் போதுமான எண்ணிக்கையில் அமர்த்தப்பட வேண்டும். பொருத்தமான குழந்தைகள் பராமரிப்பு திறன் மேம்பாட்டு திட்டங்களை சுகாதார அதிகாரிகள் தொடங்க வேண்டும். முழுமையான குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் தனி ஏற்பாடுகள், உதாரணத்துக்கு கொரோனா பாதித்த குழந்தைகளுக்கு தனி படுக்கைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
* கொரோனா பாதித்த குழந்தைகளுடன் பெற்றோர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்.
* கடுமையான கொரோனா ‘நெகட்டிவ்’ என முடிவு வந்த குழந்தைகளுக்கு பன்னமைப்பு அழற்சி நோய்க்குறி உள்ள குழந்தைகளுக்கு தற்போதுள்ள குழந்தைகள் ஆஸ்பத்திரிகளில் பராமரிப்பு அளிக்கப்பட வேண்டும். தீவிர சிகிச்சைப் பிரிவும் இருக்க வேண்டும்.
* பெரும்பாலான குழந்தைகள் அறிகுறிகள் அற்றோ, லேசான கொரோனா பாதிப்புக்கோ ஆளாகலாம். அவர்களை வீட்டில் வைத்து பெற்றோரே பராமரிக்கலாம். அவர்களுக்கு காய்ச்சல் என்றால் பாரசிடமோல் மாத்திரைகளைத் தருவதுடன், சுவாச பிரச்சினை உள்ளதா, ஆக்சிஜன் செறிவு எவ்வளவு உள்ளது என்பதையெல்லாம் கண்காணித்து வர வேண்டும்.
* குழந்தைகளை வீட்டில் வைத்து பராமரிக்கிறபோது, அதில் ஆஷா மற்றும் எம்.பி.எச். பணியாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.