கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தை போக்கிய விஞ்ஞானிகள்
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளான நபரை மீண்டும் அது தாக்கும் என்ற கேள்வி எழுந்து நிற்கிறது.
இந்த நிலையில்தான், ஹாங்காங்கில்தான் உலகிலேயே முதல்முறையாக ஆரோக்கியமான, இளம் வயதுள்ள ஒருவருக்கு கொரோனா வந்து குணம் ஆனார். ஆனால் 142 நாட்களுக்கு பிறகு அவருக்கு மறுபடியும் கொரோனா, அறிகுறிகளற்ற நிலையில் வந்துள்ளது. இதுபற்றி மருத்துவ தொற்றுநோய்கள் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
அதே சூட்டோடு சூடாக பெல்ஜியத்திலும், நெதர்லாந்திலும் தலா ஒருவருக்கு கொரோனாவில் இருந்து குணம் அடைந்த நிலையில் மீண்டும் தொற்று வந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது கொரோனா வந்து குணமானவர்கள், தற்போது கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுகிறவர்கள் மத்தியில் ஒரு பதற்றத்தை, அச்சத்தை, பீதியை ஏற்படுத்த தவறவில்லை.
இங்கே குறிப்பிடத்தகுந்த ஒரு அம்சம், ஹாங்காங் நோயாளிக்கு நோய்த்தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது தாக்குதலை தொடர்ந்து, அவரிடம் இருந்து பகுப்பாய்வு செய்யப்பட்ட வைரஸ் மரபணுக்கள் 2 வெவ்வேறு திரிபுகள் அல்லது உயிரின கிளையை சேர்ந்தது என்றும், இது நோயாளி குணம் அடைந்த பின்னர் வைரசின் வேறுபட்ட மாறுபாட்டை பெற்றிருப்பதை காட்டுவதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
இந்த சூழலில், கொரோனா மீண்டும் தாக்குமோ என அஞ்சுவதற்கு அவசியம் இல்லை என்பதே விஞ்ஞானிகளின் கருத்தாக அமைந்துள்ளது. அதுபற்றிய ஒரு பார்வை இது-
விஞ்ஞானி சத்யஜித் ராத்:- (டெல்லி தேசிய நோய் எதிர்ப்பு நிறுவன வல்லுனர்)
வைரசுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு அமைப்பு பற்றிய முடிவுகளை தனிப்பட்ட நோயாளிகளின் பாதிப்பில் இருந்து எடுக்க முடியாது.
இது போன்ற நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மீண்டும் தொற்று ஏற்படுவது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. குறிப்பாக, இது போன்ற 3 உறுதிபடுத்தப்பட்ட நபர்கள் பற்றி மட்டுமே தகவல்கள் வந்துள்ளதால் எதுவும் கூற இயலாது.
விஞ்ஞானி ராம் விஷ்வகர்மா:- (ஜம்மு இந்திய ஒருங்கிணைந்த மருந்துகள் நிறுவன முன்னாள் இயக்குனர்)
ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். இது வேறுபட்ட உள்ளார்ந்த மரபணு காரணங்களால் இருக்கலாம் அல்லது அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை அடக்கும் மருந்துகளில் இருக்கலாம். மேலும் தனிப்பட்ட நிகழ்வுகளின் வரலாறு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
வைரசுக்கு எதிரான இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி எல்லோரிடமும் அதே அளவில் இருக்காது. அதே வழியில் பாதுகாப்பானதாகவும் இருக்காது. எனவே வைரசால் முதல் முறை பாதிக்கப்பட்ட ஒரு நபர் அல்லது தடுப்பூசி போடப்பட்ட ஒருவர், ஆன்டிபாடிகளில் இருந்து பாதுகாப்பை பெறாமல் இருக்கலாம். ஆனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் டி செல்கள் வழியாக சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கலாம். இருப்பினும் மற்றொரு நபரின் நிலை இப்படி இருக்காது. ஏராளமானவர்களிடம் ஆன்டிபாடி உருவாகாமல் போகலாம். ஆனால் இது ஒன்றே பாதுகாப்பு என்பது அர்த்தம் அல்ல.
உயிரியல் ரீதியில், மக்கள் ஒரே மாதிரி இருக்கலாம். ஆனால் ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு வித்தியாசமாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் சிக்கலான பின்னணியில் உள்ள அறிவியல் இன்னும் தெளிவாக இல்லை. அது குறித்த புதிரின் பல பகுதிகள் இன்னும் தீர்க்கப்படவும் இல்லை.
பெல்ஜியம் விஞ்ஞானி மார்க் வான் ரான்ஸ்ட்:-
தனிப்பட்ட நபர்களின் அனுபவத்தில் இருந்து பரந்த ஒரு முடிவுக்கு வர முடியாது. தொற்று எவ்வளவு இடைவெளியில் மீண்டும் வரக்கூடும் என்பது இன்னும் எங்களுக்கு தெரியவில்லை.
இப்படி விஞ்ஞானிகள் பலரும் கருத்து கூறி உள்ளனர்.
இதன் காரணமாக 3 நபர்களுக்கு மீண்டும் கொரோனா தாக்கியது என்பதற்காக நமக்கும் தாக்கும் என கொரோனா வந்த யாரும் பயப்படுத்தேவையில்லை. ஒவ்வொருவரின் நோய் எதிர்ப்பு சக்தியும் மாறுபடுகிறது. இந்த விவகாரத்தில் இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுவதாக அறிவியல் நோக்கர்கள் கருதுகின்றனர். எனவே பயம் வேண்டாம்.