கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மரணம்!
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது.
கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனை மருத்துவரிடம் ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜெ.அன்பழகன் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
ஜெ அன்பழகன் சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அனுப்பி வைத்திருந்தார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலை இன்று மீண்டும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மருத்துவர்களிடம் விசாரித்தார்.
இந்நிலையில் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய நடைமுறைகளுக்கு பிறகு ஜெ அன்பழகன் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.