Tamilவிளையாட்டு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 23 வீரர்களுடன் இங்கிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக ஐசிசி சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடிய நிலையில், இங்கிலாந்துடன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 4-ந்தேதி தொடங்குகிறது.

ஐசிசி சாம்பியன்ஷிப் பைனல் கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி வரை நடைபெற்றது. சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கும் இடையில் சுமார் 40 நாட்கள் இடைவெளி உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை இந்திய அணியில் உள்ள இரண்டு வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் குணமடைந்துவிட்டார். ஒருவருக்கு இன்னும் தொற்று பாதிப்பு உள்ளது என்ற செய்தி வெளியானது.

தற்போது இரண்டு பேரில் ஒருவர் ரிஷப் பண்ட். அவர் இன்று துர்ஹாம் செல்லும் அணியுடன் செல்லமாட்டார். அவர் தங்கி இருக்கும் அறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகின.

இதை உறுதிபடுத்தும் விதமாக, யூரோ 2020 உலகக்கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் இங்கிலாந்து- இத்தாலி அணிகள் மோதிய ஆட்டத்தை நேரில் பார்க்க சென்றபோது, ரசிகர் ஒருவருடன் முகக்கவசம் அணியாத நிலையில் ரிஷப் பண்ட் இருக்கும் படம் வெளியாகியுள்ளது.

அவருக்கு முன்னதாகவே கொரோனா வைரஸ் தொற்று தாக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷா, வீரர்கள் யூரோ 2020 மற்றும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை தவிர்க்குமாறு  கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் இருவர் பாதிக்கப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.

பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில் ‘‘ஒரு வீரருக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. ஆனால், கடந்த 8 நாட்களாக அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அணிகளின் மற்ற வீரர்களுடன் அவர் இணைந்து தங்கவில்லை. ஆகவே, மற்ற வீரர்கள் பாதிக்கப்படவில்லை. அந்த வீரரின் பெயரை வெளியிட முடியாது’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘‘தற்போது வேறு யாருக்கும் பாசிட்டிவ் இல்லை. எங்களுடைய செயலாளர் ஜெய் ஷா, வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.