தமிழில் முகமூடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான பூஜாஹெக்டே தெலுங்கு, இந்தி படங்களில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு அனுபவங்கள் பற்றி அவர் கூறியதாவது: “சினிமாகாரர்கள் என்றாலே படப்பிடிப்பில் பிஸியாக இருப்போம். ஆனால் இப்போது எல்லோருமே வீட்டில்தான் இருக்கிறோம். நான் மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் எங்கள் வீட்டில் தென்னிந்திய சூழலைத்தான் பார்க்க முடியும். தென்னிந்தியாவில் நடக்கும் எல்லா பண்டிகைகளையும் ஆர்ப்பாட்டமாக கொண்டாடுவோம்.
பொங்கல் என்றாலே எனது அம்மா செய்யும் லட்டுதான் நினைவுக்கு வரும். காத்தாடி பறக்க விடுவோம். தசரா என்றால் எங்கள் வீட்டில் கொலு இருக்கும். பஜனை நடத்துவோம். நான் நடிகையான பிறகும் கூட அந்த ஒன்பது நாட்கள் பஜனைக்கு வந்து உட்கார்ந்து விடுவேன்.
இப்போது கொரோனாவால் நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து பண்டிகைகளை உற்சாகமாக கொண்டாட முடியவில்லை. விநாயகர் சதுர்த்தியை விமரிசையாக கொண்டாட முடியவில்லை. கொரோனா முடியும் முன்பு எல்லா பண்டிகைகளும் வீணாக போய் விடும் என்ற வருத்தம் இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.