Tamilசினிமாதிரை விமர்சனம்

கொரில்லா- திரைப்பட விமர்சனம்

ஜீவா, ஷாலினி பாண்டே, ராதா ரவி, யோகி பாபு ஆகியோரது நடிப்பில், டான் சாண்டி இயக்கத்தில் விஜய் ராகவேந்திரா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘கொரில்லா’ எப்படி என்று பார்ப்போம்.

சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்தும் ஜீவா, வேலையை இழந்த சதீஷ், சினிமாவில் நடிகராக முயற்சிக்கும் விவேக் பிரசன்னா ஆகியோர் வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்ய, இவர்களது வீட்டின் கீழ் தளத்தில் இருக்கும் விவாசயத்தில் நஷ்ட்டம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட விவசாயியும் இவர்களுடன் சேர்ந்துக் கொள்ளையடிக்க திட்டம் போடுகிறார். இந்த நான்கு பேருடன் காங்க் என்ற சிம்பான்ஸி குரங்கும் சேர, இந்த ஐவர் கூட்டணி வங்கியில் கொள்ளையடித்துவிட்டு திரும்பும் போது, சிம்பான்ஸி குரங்கின் சுட்டி தனத்தால் வங்கியில் சிக்கிக்கொள்ள, போலீஸ் ரவுண்டப் செய்துவிடுகிறது. பிறகு, போலீசிடம் இருந்து தப்பித்தார்களா, இல்லையா என்பது தான் மீதிக்கதை.

வங்கி கொள்ளையை ஒட்டிய திரைக்கதையோடு, விவசாயம் மற்றும் விவசாயிகளின் அவல நிலையை சொல்கிறேன் என்று, விறுவிறுப்பாக நகரக்கூடிய திரைக்கதையை போரடிக்குற விதத்தில் நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் டான் சாண்டி.

ஜீவா ரெகுலராக நடிக்கும் “மச்சி ஒரு குவட்டர் சொல்லேன்” என்பது போன்ற சாதாரண கதாபாத்திரத்தில், எப்போதும் போல நடித்திருக்கிறார். சதீஷுக்கும் அப்படிபட்ட ஒரு வேடம் தான், அவரும் எப்போதும் போலவே நடித்திருக்கிறார். நல்லா நடிக்க கூடியவர் என்ற பெயர் எடுத்த விவேக் பிரசன்னாவுக்கு, அப்படி ஒரு பெயர் கிடைக்கும் அளவுக்கு படத்தில் வாய்ப்பு இல்லாததால், அவரும் சாதாரணமாகவே வந்து போகிறார். இவர்களை விட ஹீரோயின் ஷாலிணி பாண்டேவின் நிலை தான் ரொம்ப பரிதாபதற்குரியதாக இருக்கிறது.

காங்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிம்பான்ஸியை இந்த அளவுக்கு நடிக்க வைத்ததற்காகவே இயக்குநரை பாராட்டாலாம். சில இடங்களில் குரங்கை நடிக்க வைப்பதைக் காட்டிலும், அது செய்யும் சில்மிஷங்களை படம்பிடித்து மேனஜ் செய்திருக்கிறார்கள்.

சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார் என்பது பெயரை பார்த்தால் தான் தெரிகிறது. இசையில் அவரது முத்திரை இல்லை. சுமாரான பாடல்களும், படு சுமாரான பின்னணி இசையை கொடுத்திருக்கிறார். முழு படமும் வங்கியில் நடப்பதால், வங்கியை செட் அமைத்திருக்கிறார்கள். அதை அப்பட்டமாக ஆர்.பி.குருதேவின் கேமரா காட்டிவிடுகிறது.

ஹாலிவுட் படங்களை பார்த்து பார்த்து அதன் தாக்கத்தில் திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் டான் சாண்டி, அதை அப்படியே படமாக்கினால் மாட்டிக்கொள்வோம் என்று, விவசாயிகள் பற்றி பேசுவதாக கூறி திரைக்கதையின் திசையை மாற்றுவது படத்திற்கு பலவீனமாக அமைந்துவிடுகிறது.

வங்கி கொள்ளையை எப்படி எல்லாம் விறுவிறுப்பாக காட்ட வேண்டுமோ அப்படி எல்லாம் காட்டாத இயக்குநர் டான் சாண்டி, எப்படி எல்லாம் சொதப்ப வேண்டுமோ அப்படி எல்லாம் சொதப்பி, இறுதியில் விவசாயிகள் கடன் பற்றி பேசி, செண்டிமெண்டாக ரசிகர்களை டச் செய்ய முயற்சித்திருக்கிறார்.

யோகி பாபு மற்றும் ராதாரவி சில காட்சிகள் வந்தாலும் சிரிக்க வைக்கிறார்கள். ஆனால், அவர்களது நகைச்சுவையில் பிறரை இழிவுப்படுத்தும் தேவையில்லாத வசனங்கள் இடம்பெற்று முகம் சுழிக்க வைக்கிறது. மற்றவர்களை துன்புறுத்தி தான் காமெடி செய்ய வேண்டும் என்றால், அதை செய்யாமலே இருக்கலாம்.

எதையும் காமெடியாக சொன்னால், தவறுகள் கூட கண்டுக்கு தெரியாமல் போய்விடும் என்பதால், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் நம்மை தூங்க வைத்துவிடுகிறார். அதிலும் ஒரே இடத்தில் நகரும் கதையில், காட்சிகளிலும் எந்தவித புதுமை இல்லாததால் முழு படமும், தாலாட்டாகவே இருக்கிறது.

மொத்தத்தில், ‘கொரில்லா’ புஷ்பானமான சிரிப்பு வெடி!

-ஜெ.சுகுமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *