முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நமது தாய் திருநாட்டின் இறையாண்மையினை காத்திடும் உயரிய சேவையில் தங்களை ஈடுபடுத்தி கொண்ட முப்படை வீரர்களின் மாபெரும் தியாக உணர்வுக்கு நாம் நன்றிக் கடன் செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் நாளை படைவீரர் கொடி நாளாக அனுசரிக்கின்றோம். இந்த நாளில் படைக்களத்தில் விழுப்புண்களை ஏற்று, தமது இன்னுயிரை ஈந்த எண்ணற்ற படைவீரர்களது தியாகத்தையும், சேவையையும் நாம் மனதார போற்றுகின்ற அதே வேளையில், அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை நல்குவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
அரும்பாடுபட்டு பெற்ற விடுதலையை காப்பாற்றும் பெரும் பணியில் ஈடுபட்ட முப்படை வீரர்களின் குடும்பத்தாரின் நலனைக் காப்பதில் தமிழ்நாடு என்றென்றும் முன்னணியில் திகழ்கின்ற தனிப் பெருஞ்சிறப்பைப் பெற்றுள்ளது.
ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் நலன்களை காத்திட, போரில் உயிரிழந்த படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை மற்றும் கருணை அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. 2011 முதல் 2020 வரை 3,387 முன்னாள் படை வீரர்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பல்வேறு பணியிடங்களில் பணியமர்த்தம் செய்துள்ளது. மேலும், முன்னாள் படைவீரர்களின் பிள்ளைகள் பட்டப் படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் படிப்பதற்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்க்கு மருத்துவ நிவாரண நிதியுதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் வழியாக முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
இந்த இனிய நாளில், முப்படை வீரர்கள் மற்றும் முன்னாள் படைவீரர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, நமது முப்படை வீரர்களின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையிலும், நம் தேச பக்தியை வெளிப்படுத்தும் வகையிலும், கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதியினை வழங்கிட வேண்டுமென அனைவரையும் நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.