கொடநாடு வீடியோ விவகாரம்! – கவர்னர் மாளிகை முன்பு திமுகவினர் போராட்டம்
கொடநாடு கொலை கொள்ளை தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. எனவே, முதல்வர் பதவி விலக வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் மனு அளித்தார். இந்த மனு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காத நிலையில் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் அறிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகிட வேண்டுமென்றும், தமிழக ஆளுநர் முதல்வர் மீது அரசியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நேர்மையான ஐஜி தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக்குழுவை ஏற்படுத்தி மேல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி 24-ம் தேதி அன்று காலை 10 மணியளவில், சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, ஆளுநர் மாளிகை நோக்கி இன்று காலை திமுக நிர்வாகிகள் புறப்பட்டுச் சென்றனர். ஆளுநர் மாளிகையை நெருங்கியபோது, போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து, திமுகவினரை தடுத்து நிறுத்தினர். ஆனால் திமுகவினர் தொடர்ந்து முன்னேறி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் செல்ல விடவில்லை. இதையடுத்து திமுகவினர் ஆளுநர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுகவின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன், சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.