X

கொடநாடு விவகாரம்! – முதல்வரை பதவி விலக வலியுறுத்தும் தங்கதமிழ்ச்செல்வன்

ஆண்டிப்பட்டியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சிலைக்கு அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அந்த சம்பவம் முதல்வர் பழனிச்சாமி ஏற்பாட்டில்தான் நடந்ததா? என்பது விசாரணையில்தான் தெரிய வரும். முதல்வர் மீது பழி சுமத்தப்பட்டிருப்பதால் அவர் தனது பதவியை விட்டு விலகி வேறு ஒருவரிடம் தற்காலிகமாக ஒப்படைக்க வேண்டும். தான் நிரபராதி என நிரூபித்தபின் மீண்டும் முதல்வர் பதவிக்கு வரலாம். இதை அவர் செய்வாரா? என்பது தெரிய வில்லை.

இந்த சம்பவத்தில் யார்? யாரெல்லாம் தொடர்பில் இருக்கிறார்கள் என்பது விசாரணைக்கு பின்னரே தெரிய வரும். தனி நீதிபதி மூலமாகவோ, சி.பி.ஐ. மூலமாகவோ விசாரித்து அதன் உண்மைத்தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. 3 மாதத்தில் விசாரணை முடியும் என கூறிய நிலையில் 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இழுத்துக்கொண்டே செல்வது ஏன்? அப்படி என்றால் இந்த விசாரணை கமி‌ஷன் இன்னும் எத்தனை ஆண்டுக்குள் இதனை முடிக்கும் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினர்.