கொடநாடு எஸ்டேட் விவகாரம்! – இன்று கவர்னரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.

இதை மறைப்பதற்காக ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவை சேர்ந்த கூலிப்படை தலைவன் ‌சயான், மற் றொரு குற்றவாளி மனோஜ், தெகல்கா இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத் யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந்தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

கொடநாடு கொலை- கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மறுத்ததுடன் இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாக கருதுகிறேன் என்றார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடநாடு விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும். சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். ஐகோர்ட்டில் நீதிபதி மேற்பார்வையில் இந்த விசாரணை நடந்தப்படவேண்டும்.

முதல்-அமைச்சரை அழைத்து ஜனாதிபதியும், கவர்னரும் விளக்கம் கேட்க வேண்டும்.

இந்த பிரச்சனையை ஜனாதிபதி, கவர்னர் ஆகியோரின் கவனத்துக்கு தி.மு.க. கொண்டு செல்ல இருக்கிறது. இன்று கவர்னரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம் என்றார்.

இதையடுத்து கவர்னரை மு.க.ஸ்டாலின் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. அதன்படி கவர்னரை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு இன்று மாலை 5.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாலை 5.30 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, மு.க.ஸ்டாலின் சந்தித்து கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் மனு அளிக்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools