நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் அங்குள்ள மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இது தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர்.
இந்த வழக்கில் தனிப்படை போலீசார் மறுவிசாரணை நடத்தி வந்தனர். இதுவரை சசிகலா, முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி உள்பட 200-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி தலைமையிலான ஷகில் அக்தர் தலைமையிலான குழுவினர் கடந்த 26-ந்தேதி கொடநாடு எஸ்டேட்டில், 2 மணி நேரம் ஆய்வு நடத்தினர். அப்போது காவலாளி ஓம்பகதூரை கொன்று உடலை கட்டி வைத்திருந்த மரம் திடீரென காணாமல் போயுள்ளது. அந்த மரத்தை வெட்டி விட்டு அருகில் மற்றொரு மரக்கன்றை நட்டுள்ளனர்.
கொடநாடு வழக்கு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் சாட்சிகளை கலைத்தது போல் அந்த மரத்தை எஸ்டேட் ஊழியர்கள் வெட்டி உள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த நிலையில் மரம் வெட்ட அனுமதி பெறப்பட்டதா என ஊட்டியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, வனத்தில் வெட்டப்படும் மரங்கள் குறித்து வனத்துறை நேரடியாக நடவடிக்கை எடுக்கும். தனியார் பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்ட மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற வேண்டும். கொடநாட்டில் மரம் வெட்டப்பட்டதற்கு எஸ்டேட் நிர்வாகம் அனுமதி பெறவில்லை. மரம் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.