X

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு – குற்றவாளிகள் பயன்படுத்திய 8 செல்போன்களை வழங்க கோரி சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கொடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் தலைமையிலான கும்பல் அரங்கேற்றியது.

இதில் கனகராஜ் சாலை விபத்தில் இறந்து விட்டார். இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடையதாக சயான், வாளையார் மனோஜ் உள்பட கேரளாவை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர். கொடநாடு கொலை, கொள்ள தொடர்பான வழக்கு ஊட்டி செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த சம்பவத்தில், சயான், வாளையார் மனோஜ், சந்தோஷ் சாமி, திபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ்சாமி, பிஜின் குட்டி, ஆகிய 10 பேர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

தவிர, வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்பட 316 பேரிடம் மறு விசாரணையும் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றப்பட்ட பின், சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, 49 பேர் அடங்கிய குழு விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் நேற்று ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதரிடம் மனு தாக்கல் செய்தனர். அதில், இந்த வழக்கில் தொடர்புடைய விபத்தில் இறந்த கனகராஜ் மற்றும் சகோதரர் தனபால் உட்பட குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் இருந்து, 8 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏற்கனவே கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. அந்த போன்களை விசாரணைக்காக தங்களிடம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளனர்.

அந்த செல்போன்கள் சி.பி.சி.ஐ.டி வசம் வந்ததும், போன்களில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்யும் வகையில், கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி, அதில் கிடைக்கும் தகவல்களை வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்த உள்ளனர்.

Tags: tamil news