கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த மக்கள் வீட்டின் ஜன்னல், கதவுகளை மூடி வைக்க வேண்டும் – மாநகராட்சி அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து தற்போது இரவில் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை முழுவதும் கடந்த ஒரு மாதமாக கொசுப்புழுக்களின் உற்பத்தி அதிகரித்து அதனால் நோய் தொற்றும் பரவி வருகிறது.

கொசுத் தொல்லையை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கூவம், அடையாறு உள்ளிட்ட நீர்வழித்தடங்களில் டிரோன் எந்திரங்கள் மூலம் கொசுக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மண்டலம் வாரியாக காலை, மாலை நேரங்களில் இந்த பணிகள் நடந்து வருகிறது. 644 மருந்து தெளிப்பான்கள் நாள் தோறும் பயன்படுத்தப்படுகிறது. சென்னை முழுவதும் 3 ஆயிரத்து 312 மாநகராட்சி பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த 3 நாட்களில் மழைநீர் வடிகால்களில் 817 கி.மீ, நீளத்துக்கு கொசுக்கொல்லி நாசினி தெளித்தும், 829 கி.மீ.நீளத்துக்கு கொசு ஒழிப்பு புகைபரப்பியும், 10,723 தெருக்களில் கொசு ஒழிப்பு புகைபரப்பியும், நீர்நிலைகளில் 208.85 கி.மீ. நீளத்துக்கு டிரோன் மற்றும் படகுகள் மூலம் கொசுக்கொல்லி நாசினி தெளிக்கப்பட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

231 தெருக்களில் உள்ள மழைநீர் வடிகாலில் தேங்கியிருந்த தண்ணீர் பம்பிங் செய்யப்பட்டு நீர்நிலைகளுக்கும் அனுப்பப்பட்டது. இதேபோல, பொதுமக்களும் தங்களின் வீடுகளுக்கு அருகேயும், மொட்டை மாடிகளில் தண்ணீர் தேங்காத வண்ணம் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த பொதுமக்கள் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை தங்களின் வீட்டு கதவுகளையும், ஜன்னலையும் மூடவேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளது. சென்னை மாநகராட்சியின் இந்த பதிவுக்கு சமூக வலைதளத்தில் பலர் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools