சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற சாமியார் நித்யானந்தா மீது தற்போது குழந்தைகளை சிறை வைத்ததாக புகார் எழுந்துள்ளது.
பெங்களூரை சேர்ந்த ஜனார்த்தன சர்மா என்பவர் தனது மகள்களை, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்துக்கு கடத்தி சென்று சிறை வைத்ததாக நித்யானந்தா மீது போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் நித்யானந்தா மீது கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் குஜராத் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போலீசார் தேடுவதை அறிந்ததும் நித்யானந்தா தலைமறைவானார். அவர் மீது வெளிநாட்டு பக்தை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார்.
ஏராளமான பக்தர்களிடம் பண மோசடி செய்துவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அடுத்தடுத்து சர்சைகளில் சிக்கிய நித்யானந்தா தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள ஈக்வடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. அந்த தீவுக்கு ‘கைலாசா’ என பெயரிட்டு அதனை தனிநாடாக அறிவிக்கும் முயற்சியில் நித்யானந்தா ஐ.நா.சபையை நாடி இருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
ஆனால் இந்த தகவலை ஈக்வடார் அரசு மறுத்தது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுற்றுலா பயணியாக ஈக்வடாருக்குள் நுழைந்த நித்யானந்தாவுக்கு தற்காலிக விசா வழங்கப்பட்டதாகவும், பின்னர் அகதிகளுக்கான விசா கேட்ட நித்யானந்தாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் அவர் ஈக்வடாரில் இருந்து ஹைதி தீவுக்கு சென்றுவிட்டதாக ஈக்வடார் தூதர் கூறியுள்ளார்.
ஆனாலும், கைலாசா நாடு குறித்த சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. கைலாசா நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றி உள்ளதாக வீடியோ வெளியிட்ட நித்யானந்தா தனது நாட்டுக்கு இதுவரை 12 லட்சம் பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளதாக பரபரப்பை கிளப்பினார்.
ஈக்வடார் அரசு நித்யானந்தாவை ஏற்க மறுத்த நிலையில் வேறு சில நாடுகளில் தனக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது வரை நித்யானந்தா எங்கு பதுங்கி இருக்கிறார்? என்பதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும், நித்யானந்தா தினந்தோறும் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தோன்றி பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.
இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் புதிதாக வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
எனது சீடர்கள் என்னை நினைத்து பரணி தீபத்தை கையில் ஏந்தியபடி ஆசிரமத்தை சுற்றி வருகிறார்கள். உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குகிறேன். எனது உடலைப் பயன்படுத்தி பரமசிவன் இவ்வுலகில் கைலாசத்தை உருவாக்குகிறார்.
ஸ்ரீகைலாசா திட்டத்தை தொடங்குகிறோம். இது ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல. கைலாசா என்பது ‘எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி.’
கைலாசா மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீங்கள் உங்கள் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம். அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் நம் மீது பழி சுமத்துப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என மெய்ப்பிக்கிறோம். அதன் மூலம் நமது புகழ் உயருகிறது. மேலும் மேலும் பலர் நம் மீது நம்பிக்கை வைக்கிறார்கள்.
ஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைக்க மாட்டார்கள். தாக்குதலை எதிர் கொள்பவர்தான் வரலாறு படைப்பார்கள்.
என் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள். நானே மனிதத்தின் எதிர்காலம்.
இவ்வாறு அதில் பேசியுள்ளார்.