அமெரிக்காவின் புளோரிடா நகரில் கடந்த 1998ம் ஆண்டு சோண்ட்ரா பேட்டர்(68) எனும் மூதாட்டி கடை ஒன்றில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். இந்த கொலைக்கு காரணமானவர் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரித்தும் கண்டறிய முடியவில்லை.
பேட்டர் இறப்பதற்கு முன் ஒருவர் கடைக்கு வந்து சென்றது மட்டும் கண்டறியப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த இரத்த மாதிரிகள், கை ரேகைகள் அனைத்தும் இருந்தும் கொலை செய்த நபரின் முக அடையாளங்கள் ஏதும் தெரிய வராததால், காவல்துறையினர் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை.
20 ஆண்டுகள் மர்மமாக இருந்த இந்த வழக்கில், சமீபத்தில் குற்றவாளி கண்டறியப்பட்டுள்ளார். பார்கட்(51) என்பவர் மருத்துவமனையில் செவிலியர் பணிக்காக விண்ணப்பித்தார். அவருக்கு வேலை கிடைக்கவே, அவரது கை ரேகைகள், மற்ற ஆவணங்களை மருத்துவமனை நிர்வாகம் அனுப்ப சொல்லியுள்ளது.
இந்த கை ரேகைகள் பேட்டர் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்த கை ரேகையுடன் ஒத்து போயுள்ளது. இதனையடுத்து பேட்டர் கொலை செய்யப்பட்ட கடையில் இருந்த டிஎன்ஏ மாதிரிகளை வைத்து, பார்கட்டின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதுவும் ஒத்துப் போகவே, பார்கட்டை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரித்தனர். அவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த வழக்கில் 20 ஆண்டுகளுக்கு பின் ஒரு வேலைக்கான விண்ணப்பம் குற்றவாளி கைது செய்யப்பட காரணமாக இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.