கையில் 3 ரூபாய் மட்டும் இருந்தும், 40 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்த நபர்!
‘காசு இருந்தால் தான் எல்லாம்’ என கூறுகின்ற இந்த காலத்திலும், தனக்கு கூடுதலாக பணம் கிடைத்தபோதிலும் அதை வேண்டாமென ஒருவர் பெருந்தன்மையாக மறுத்த சம்பவம் மராட்டிய மாநிலத்தில் நடந்துள்ளது. மராட்டிய மாநிலம் சாதரா பகுதியை சேர்ந்தவர் தனஞ்ச் ஜெக்தலே (வயது 54). தாகிவாடி பகுதிக்கு சென்ற அவர் மீண்டும் ஊருக்கு செல்வதற்காக அங்குள்ள பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது சாலை ஓரம் கீழே ஒரு பண்டலாக ரூபாய் நோட்டுகள் கிடந்தன. அதனை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.40 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி தனஞ்ச் ஜெக்தலே, அங்கு இருந்தவர்களிடம் விசாரித்தபோது, பதற்றத்தில் இருந்த ஒருவர் அந்த பணம் தன்னுடையது என கூறினார். அந்த நபர் தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்காக இந்த பணத்தை எடுத்து வந்தபோது தவற விட்டது தெரியவந்தது. அவரிடம் ஜெக்தலே பணத்தை கொடுத்தார்.
ஜெக்தலேவின் நேர்மையால் நெகிழ்ந்து போன அந்த நபர், அவருக்கு ரூ.1,000 பரிசாக கொடுத்தார். ஆனால் அதனை வாங்க மறுத்த ஜெக்தலே, தனக்கு வெறும் 7 ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும் என அவரிடம் தெரிவித்தார். அந்த இடத்தில் இருந்து ஜெக்தலேவின் ஊருக்கு பஸ் டிக்கெட் கட்டணம் 10 ரூபாய் ஆகும். அவரிடம் வெறும் 3 ரூபாய் மட்டுமே இருந்தது.
இறுதியில் அந்த 7 ரூபாயை மட்டுமே பெற்றுக்கொண்ட ஜெக்தலே ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
இந்த செய்தியை அறிந்ததும் சாதரா பா.ஜனதா எம்.எல்.ஏ. உள்பட பலரும் ஜெக்தலேவை பாராட்டி அவருக்கு பரிசாக பணம் கொடுத்தபோதும் அதனை வாங்க மறுத்து விட்டார்.
இதேபோல் அமெரிக்காவில் வசிக்கும் அந்த மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ரூ.5 லட்சம் கொடுத்தபோதும் அதனை வாங்க மறுத்துவிட்டார்.
இதுபற்றி ஜெக்தலே கூறும்போது, “யாரோ ஒருவரிடம் இருந்து பணத்தை பெற்றால் மட்டும், ஒருவர் திருப்தி அடைய முடியாது என நினைக்கிறேன். நான் பரப்ப விரும்பும் ஒரே செய்தி, மக்கள் நேர்மையாக வாழ வேண்டும்” என்றார்.