Tamilசெய்திகள்

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிருக்கு நல வாரியம் – அரசாணை வெளியீடு

சமூக நலன் மகளிர் உரிமைத்துறை முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபையில் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கடந்த 1.9.2021 அன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் சமுதாயத்தில் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சரை தலைவராகவும், சமூக நல இயக்குனரை உறுப்பினர் செயலாளராகவும் கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தை உருவாக்க ஆணையிடப்பட்டு உள்ளது.

இந்த வாரியத்தின் அலுவல்சார் உறுப்பினர்களாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர், தி.மு..க. எம்.பி. டாக்டர் கனிமொழி என்.வி.என்.சோமு, எம்.எல்.ஏ. வரலட்சுமி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் (அல்லது அவரது பிரதிநிதி), பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குனர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர், சமூக பாதுகாப்புத் திட்ட இயக்குனர் (சென்னை), தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குனர் (சென்னை) ஆகியோர் பணியாற்றுவார்கள்.

அலுவல் சாரா உறுப்பினர்களாக 14 பேர் தகுதியானவர்கள் என்று கண்டறியப்பட்டனர். அதன்படி, சக்தி மசாலா நிறுவன இயக்குநர் சாந்தி துரைசாமி, ரேணுகா ஆலிவர், ரேவதி அழகர்சாமி உள்பட 14 பேரை அலுவல்சாரா உறுப்பினர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்படுகிறது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.