கே.ஜி.எப் -திரைப்பட விமர்சனம்
கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள பீரியட் கேங்ஸ்டார் படமான இந்த ‘கே.ஜி.எப்’ (KGF – Kolar Gold Fields) எப்படி என்பதை பார்ப்போம்.
சிறு வயதில் தாய், தந்தையை இழந்த ஹீரோ யாஷ், தனது அம்மாவின் வார்த்தைப்படி, அனைவரும் மதிக்கும் பெரிய பணக்காரராக ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு வாழ்கிறார். அதற்காக இளம் வயதில் மும்பைக்கு செல்பவர், அங்கிருக்கும் தாதாவிடம் வேலைக்கு சேர்வதோடு, ராக்கி என்ற பெயரில் வளர்ந்து, பெரியவனான பிறகு மும்பையை கலக்கும் தாதாவாகிறார். பெரிய பெரிய டான்களே பார்த்து பயப்படும் அளவுக்கு அதிரடி ஆளாக உயரும் யாஷுக்கு மும்பை முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதே லட்சியம்.
இதற்கிடையே, கோலார் தங்க வயலை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ருத்ராவை போட்டு தள்ளிவிட்டு அந்த சாம்ராஜ்யத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடும் அவரது பார்ட்னர்கள், ருத்ராவை கொலை செய்யும் பொருப்பை யாஷுக்கு கொடுக்கிறார்கள். அப்படி ருத்ராவை கொலை செய்துவிட்டால், மும்பை முழுவதையும் உனக்கு கொடுப்பதாகவும் அவர்கள் யாஷிடம் வாக்கு கொடுக்க, ருத்ராவை கொலை செய்வதற்காக மும்பையில் இருந்து பெங்களூர் வரும் யாஷ், ருத்ராவின் செல்வாக்கையும், அவனது சாம்ராஜ்யத்தையும் கண்டு வியப்படைவதோடு, அவனை அவனது சாம்ராஜ்ய கோட்டையான, கோலார் தங்க வயலுக்குள்ளேயே சென்று கொலை செய்ய முடிவு செய்கிறார்.
அரசுக்கே தெரியாமல், 2 ஆயிரம் மக்களை கொத்தடிமைகளாக வைத்து தங்க சுரங்கத்தை தோண்டி எடுத்துக் கொண்டிருக்கும் ருத்ராவின் கொடூரமான கோலார் தங்க வயலுக்குள் செல்பவர்கள் திரும்ப வர முடியாது. அந்த அளவுக்கு பெரும் பாதுகாப்பு கொண்ட பயங்கரமான அந்த இடத்தினுள் சென்று ருத்ராவையே கொலை செய்ய நினைக்கும் யாஷ், அதில் வெற்றி பெற்றாரா இல்லையா என்பது தான் ‘கே.ஜி.எப் – பாகம் 1’ படத்தின் கதை.
சாதாரண கேங்ஸ்டர் கதையாக தொடங்கும் படம், இரண்டாம் பாதியில் சரித்திர படத்தைப் போன்ற ஒரு பிரம்மாண்டத்தோடு ரசிகர்களை சீட் நுணிக்கு கொண்டு வந்து வியப்பில் ஆழ்த்திவிடுகிறது.
கன்னட படம் என்றாலும், படம் பார்ப்பவர்களுக்கு அத்தகைய உணர்வை ஏற்படுத்தாமல் ஏதோ வரலாற்றில் நடந்த ஒரு நிகழ்வை பற்றிய படத்தை பார்த்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதோடு, படத்தின் மேக்கிங்கிலும் மிரட்டியிருக்கிறார்கள்.
ஹீரோ யாஷ், தனது கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். தனி மனிதனாக பலரை அடித்து துவம்சம் செய்வது ஓவராக இருந்தாலும், யாஷுக்கு அது பொருந்துவது தான் அவரது கதாபாத்திரத்திற்கும், படத்திற்கும் கிடைத்த வெற்றி. ஆக்ஷன் காட்சிகளில் இருக்கும் ஆக்ரோஷம் யாஷின் நடிப்பிலும் தெரிகிறது.
வில்லன்களாக வருபவர்கள் தமிழ் ரசிகர்கள் பார்த்திராத முகங்களாக இருந்தாலும், பயங்கரமானவர்களாகவே இருக்கிறார்கள். ஹீரோயின் ஸ்ரீநிதிக்கு இந்த பாகத்தில் பெரிய வாய்ப்பு ஏதும் இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவர் முக்கிய இடம் பெறுவார் என்பது சில காட்சிகளில் தெரிகிறது.
கோலார் தங்க வயல், எப்படி கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும், அதை முதலில் எப்படி பயன்படுத்தியிருப்பார்கள், என்ற கற்பனையில் எழுதப்பட்ட இந்த கதைக்கு இயக்குநர் பிரஷாந்த் நீல் அமைக்கப்பட்ட திரைக்கதையும், காட்சிகளும் அதை அவர் கையாண்ட விதமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இசையமைப்பாளர்கள் ரவி பாஸுரர், தனிஷ்க் பாக்ச்சி ஆகியோரது பின்னணி இசையும், புவன் கெளடாவின் ஒளிப்பதிவும் பிரமிக்க வைத்திருக்கிறது. கோலார் தங்க வயல் காட்சிகளும், அந்த செட்டும், செட் போலவே தெரியாத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஹீரோ யாஷ் உள்ளிட்ட படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டுமொத்த குழுவும் மிகப்பெரிய உழைப்பை கொடுத்திருப்பது படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது.
கோலார் தங்க வயலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ருத்ரனை, யாஷ் கொலை செய்வதோடு இப்படத்தினை முடித்திருக்கிறார்கள். அந்த தங்க வயலுக்காக காத்திருக்கும் பல தலைகளை யாஷ் எப்படி தவிடுபொடியாக்கிவிட்டு அந்த ராஜ்யத்தை கைப்பற்றுகிறார், என்பதை இரண்டாம் பாகத்தில் சொல்ல இருக்கிறார்கள், என்பதற்கான பொறியை இந்த பாகத்திலேயே சில இடத்தில் சொல்லியிருக்கிறார்கள்.
கதாபாத்திரங்களும், காட்சிகளும் எப்படி ஆக்ரோஷமாக இருக்கிறதோ, அதுபோல படத்தின் வசனங்களும் ஆக்ரோஷமாக இருப்பதோடு, அறிவுப்பூர்வமாகவும் இருக்கிறது. வசனம் எழுதிய கே.ஜி.ஆர்.அசோக்குக்கு சபாஷ் சொல்லலாம்.
கதை 1981 ஆம் ஆண்டு நடப்பதால், அக்காலகட்டத்தில் பயன்பாட்டில் இருந்த பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயினின் உடை மற்றும் நடிகர்களின் லுக் போன்றவற்றோடு, மும்பை, பெங்களூர் என்று அனைத்து விஷயங்களையும் கச்சிதமாக கையாண்டிருக்கிறார்கள்.
சாதாரண கமர்ஷியல் கதையாக ஆரம்பித்து, அதை முடிக்கும் போது ஒரு சரித்திர நாயகனின் கதையாக ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு ஆயிரம் பொக்கே கொடுக்கலாம்.
மொத்தத்தில், இந்த ‘கே.ஜி.எப் – பாகம் 1’ குட்டி பாகுபலியாக ரசிகர்கள் மனதில் உயர்ந்து நிற்கிறது.
-ஜெ.சுகுமார்