கே.எல்.ராகுல் மிகச்சிறந்த ஆட்டக்காரர் என்பதில் சந்தேகம் கிடையாது – முன்னாள் கேப்டன் அசாருதீன் பேட்டி
இந்திய அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்தவர் கே.எல்.ராகுல். பேட்ஸ்மேனாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ராகுல், தொடக்க வீரராக விளையாடி வந்தார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்கு பின்னர் நடந்த போட்டிகளிலும் ராகுலின் மோசமான ஃபார்ம் தொடர்ந்து வந்தது.
இன்னொரு பக்கம் ஹர்திக் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில் பிசிசிஐயின் கவனம் அவர் பக்கம் திரும்பியது. பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ராகுல் நீக்கப்பட்டார். இன்னொரு பக்கம் அணியை வழிநடத்தும் பொறுப்பு பாண்ட்யாவுக்கு அளிக்கப்பட்டது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் துணை கேப்டன் பொறுப்பையும் பாண்ட்யா ஏற்றுள்ளார்.
சில வாரங்கள் ஓய்வுக்கு பின்னர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டத்தில், ராகுல் நேற்று விளையாடினார். இதில் நல்ல ரன்கள் குவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருந்தும் அவரால் 39 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. தொடர்ந்து அவர் தடுமாறி வருவதால் இந்திய அணியின் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், ராகுல் குறித்து முன்னாள் கேப்டன் அசாருதீன் பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
கே.எல்.ராகுல் மிகச்சிறந்த ஆட்டக்காரர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால், அவரிடம் தொடர்ச்சியாக நல்ல திறமையை வெளிப்படுத்துவதில் சிக்கல் காணப்படுகிறது. இதனை அவரால் சரி செய்ய முடியும். அதற்கு முக்கியமாக பயிற்சியாளர்கள் தான் உதவ வேண்டும்.
பந்தை எங்கு அடிக்க வேண்டும் என்று தேர்வு செய்வதில் ராகுலுக்கு பிரச்னை இருக்கிறது. இதுதான் அவர் விரைவில் ஆட்டமிழப்பதற்கு காரணமாக நினைக்கிறேன். மேலும் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் மிகவும் திறமையான வீரர்கள். உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இவர்கள் முக்கிய ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.