கே.எல்.ராகுல், தினேஷ் கார்த்திக் விளையாடுவார்களா? – பயிற்சியாளர் ராகுல் டிராவில் பதில்
இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா உடன் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள மூன்று போட்டிகளில் அவர் 4, 9 மற்றும் 9 ரன்கள் என மோசமான ஃபார்மில் உள்ளார். பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரைசதம் விளாசியிருந்தால், ஆஸ்திரேலியாவில் பேக்-ஃபுட் வீரர்கள் சிறப்பாக விளையாட முடியும். கே.எல். ராகுல் பேக்-ஃபுட் வீரர் என்பதால் இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. இருந்தாலும், மோசமாக விளையாடி வருவதால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேபோல் தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாடவில்லை. அவருக்கு போதுமான பந்துகள் கிடைக்கவில்லை என்றாலும், பாகிஸ்தானுக்கு எதிராக இக்கட்டான நிலையில் ஆட்டம் இழந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இதற்கிடையே, அதிரடி வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பண்ட்-க்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடியுள்ளார். இதனால் கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவரை நீக்கிவிட்டு ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். இந்திய அணி நாளை வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக நேற்று இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது தினேஷ் கார்த்திக் நாளைய போட்டியில் பங்கேற்பாரா? கே.எல். ராகுல் நீக்கப்படுவாரா? என்பது குறித்த கேள்விக்கு ராகுல் டிராவிட் பதில் அளித்தார்.
ராகுல் டிராவிட் அளித்த பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு:-
கே.எல். ராகுல் தலைசிறந்த வீரர். ஆடுகளத்தில் சாதனைகள் மூலம் அதை அவர் நிரூபித்துள்ளார். அவர் சூப்பராக பேட்டிங் செய்து வருகிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இந்தத் தொடர் எளிதானதாக அமையவில்லை. இதுபோன்ற விஷயம் டி20-யில் நிகழும். இந்த தொடர் மிகவும் சவாலானது. பயிற்சி ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அடுத்த சில போட்டிகளில் எல்லா துறைகளிலும் சரியான வகையில் செயல்படுவோம் என்று நம்புகிறேன்.
அவருடைய திறமை மற்றும் தரம் எங்களுக்கு தெரியும். இந்த கண்டிசனுக்கு அவர் மிகவும் பொறுத்தமானவர். சிறந்த ஆல்-ரவுண்ட் விளையாட்டை பெற்றுள்ளார். சிறந்த பேக்-ஃபுட் வீரர். இந்த கண்டிசனுக்கு இதுபோன்ற வீரர்தான் தேவை. அவர் பந்தை எதிர்கொள்ளும் விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் உள்ளோம். வீரர்களுடன் நாங்கள் ஏராளமான பேசியுள்ளோம். சரியான தகவலை இங்கே பகிர்ந்து கொள்வது கடினம். ஆனால் வார்த்தை மற்றும் செயல் மூலமாக அவருக்கு நாங்கள் கடந்த ஓராண்டாக ஆதரவாக இருக்கிறோம் என்பதை உறுதியாக கூற இயலும்.
இந்த தொடரில் இந்திய அணி செல்லும் பாதை குறித்து தெளிவாக உள்ளோம். அவற்றில் இருந்து பின் வாங்கவில்லை. நாங்கள் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளோம். தினேஷ் கார்த்திக் இன்று நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டார். துரதிருஷ்டவசமாக, பந்தை துள்ளி பிடிக்கும்போது கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டு நல்ல நிலையில் உள்ளார். பயிற்சி மேற்கொண்டார். நாளைய (இன்று) போட்டிக்கு முன் அவருடைய உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது மதிப்பீடு செய்ய வேண்டும். அவர் பழைய உடல் தகுதியை பெற, சிறந்த பயிற்சி அளித்துள்ளோம்.
நாளை (இன்று) காலை அவர் எவ்வாறு உள்ளார் என்பதை பார்த்து, அதன் பிறகு இறுதி முடிவு எடுப்போம். தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் எப்படி விளையாடினார் என்பதை மதிப்பீடுவது மிகவும் கடினம். ஏனென்றால், அவருக்கு விளையாடும் வகையில் போதுமான பந்துகள் கிடைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பந்துதான் கிடைத்தது. நெதர்லாந்துக்கு எதிராக விளையாடவில்லை. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து ஒரு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினார் என நாங்கள் நினைத்தோம். இதுதான் எங்களுக்கு தேவை.
இவ்வாறு அவர் கூறினார்.