சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் முதல் ஆட்டத்தில் 55 ரன் எடுத்தார். 2-வது ஆட்டத்தில் 10 ரன்னிலும், 3-வது ஆட்டத்தில் ஒரு ரன்னிலும் அவுட் ஆனார்.
அடுத்த மாதம் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெறும் சூழலில் லோகேஷ் ராகுல் பார்ம் பற்றி சிலர் விமர்சனங்களை முன் வைத்தனர். இந்த நிலையில் லோகேஷ் ராகுலுக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் அரை சதம் அடித்தார். 2-வது ஆட்டத்தில் மழை காரணமாக போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டதால் அவர் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட வேண்டி இருந்தது. இதனால் லோகேஷ் ராகுல் தனது விக்கெட்டை அணிக்காக தியாகம் செய்தார்.
3-வது போட்டியில் ஒரு ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டி இருந்தது. இது ஒரு போதும் எளிதானது அல்ல. அந்த ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை அளிக்க விரும்பினார். இதனால் அதிரடியாக விளையாட முயற்சித்து ஆட்டமிழந்தார். அன்றும் தனது விக்கெட்டை தியாகம் செய்தார். அவரை விமர்சிக்க வேண்டாம்.
கோலியை போல லோகேஷ் ராகுல் சரியான ஷாட்களை ஆடும் போது அவரை தடுக்க முடியாது. சில தேவையில்லாத ஷாட்களை தவிர்த்தால் ரன்களை குவித்துக் கொண்டே இருப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.