விளையாட்டுத் துறையில் சிறந்த சாதனைகளை படைக்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு மத்திய அரசால் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, துரோணாச்சாரியா விருது, தயான்சந்த் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றன.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேரி கோம், பாய்சங் பூட்டியா உள்ளிட்ட 12 பேர் கொண்ட தேர்வுக்குழு, பூனியாவின் பெயரை இறுதி செய்து விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதேபோல் அர்ஜூனா மற்றும் துரோணாச்சாரியா விருதுகளுக்கான பெயர்களும் இறுதி செய்யப்பட உள்ளது. கேல் ரத்னா விருதுக்கு மற்றொரு வீரரையும் தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது.
தற்போது ஜார்ஜியாவில் பயிற்சி மேற்கொண்டு வரும் பஜ்ரங் பூனியா, தனது பெயர் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டதை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தார். இந்த விருதுக்கு தகுதியான சாதனைகளை தான் எட்டியிருப்பதாக அவர் கூறினார். மேலும், தகுதியானவர்களுக்கே விருதுகள் சென்று சேர வேண்டும் என தான் எப்போதும் சொல்வதாகவும் அவர் கூறினார்.
ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பஜ்ரங் பூனியா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.