கேரள விருது அறிவிப்பை திருப்பி அளிப்பதாக வைரமுத்து அறிவிப்பு!
மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. இலக்கிய விருது. கவிஞர் வைரமுத்து, ஓ.என்.வி விருதுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தது. இதனால், ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம் என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் வைரமுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது; நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன்.
ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப் பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப் படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன்.
அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன்.
ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன்; அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன்.
ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.
மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன்.
தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும்.
இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமை செய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.