கேரள முன்னாள் அமைச்சர் என்னை பலமுறை உல்லாசத்திற்கு அழைத்தார் – ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு குற்றச்சாட்டு
கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை இந்த வழக்கை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான ஸ்வப்னா சுரேஷ் எழுதி உள்ள சுயசரிதை புத்தகம் வெளியாகி கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சதியின் பத்ம வியூகம் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர், முன்னாள் மந்திரி ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்று உள்ளன.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-
கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத்தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசு சார்ந்தவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தேன்.
ஆட்சி மாறினால் வழக்கு விசாரணைக்கு போகும் என்றும், என்னை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், மீண்டும் இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்தால் தான், வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறி என்னை நம்ப வைத்து அந்த ஆடியோவை பதிவு செய்தார்கள்.
முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அப்போது ஒருபோதும் உன்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
நான் யாருக்கு எதிராகவும் பாலியல் புகார் கூற விரும்பவில்லை. ஆனால் முன்னாள் மந்திரியும், கேரள சட்டசபையில் முக்கிய நபருமாக இருந்த ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை. இது தொடர்பாக அவர் எனக்கு பலமுறை அனுப்பிய வாட்ஸ் ஆப் தகவல்கள் இப்போதும் என்னிடம் பத்திரமாக உள்ளன. அதை நான் விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டேன்.
இவ்வாறு அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.