X

கேரள கன மழையில் 6 பேர் உயிரிழந்தனர் – முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்

கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

இதற்கிடையே, கேரளாவின் தென் மாவட்டங்களில் வரும் புதன்கிழமை வரை கனமழை பெய்யும். அதன்பின், வட மாவட்டங்களில் மழை தீவிரமடையும். 7 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 2 மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது வானிலை மையம்.

மேலும், மாநில அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. மக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காணாமல் போய் உள்ளார். கனமழை காரணமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.