கேரளா வரும் பிரதமர் மோடி! – முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து பேசுகிறார்
பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் பா.ஜனதா கட்சி தென்மாநிலங்களில் கூடுதல் இடங்களை பிடிக்க வியூகம் வகுத்து வருகிறது.
தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் மேலிடத்தலைவர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிற 27-ந்தேதி வருகிறார். மதுரையில் நடைபெறும் விழாவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுறார்.
தமிழக சுற்றுப்பயணம் முடிந்ததும் பிரதமர் மோடி அன்று பகல் 1.50 மணிக்கு தனி விமானம் மூலம் கேரளா செல்கிறார். கொச்சி விமானப்படை மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராஜகிரி புறப்படுகிறார்.
அங்கு 4 புதிய திட்டங்களை தொடங்கி வைத்து பேசுகிறார். பின்னர் திருச்சூர் சென்று அங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
அரசு நிகழ்ச்சிகள் முடிந்த பின்பு திருச்சூரில் நடைபெறும் பா.ஜனதா கட்சியின் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் கேரள மாநில நிர்வாகிகள் செய்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியின்போது கேரள மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது.
கேரளாவில் இப்போது சபரிமலை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராடி வருகிறார்கள்.
அவர்களுக்கு பந்தளம் ராஜ குடும்பமும், பா.ஜனதா கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரத்தில் கேரள அரசு ஐயப்ப பக்தர்களின் மனதை புண்படுத்தி விட்டதாக பிரதமர் மோடி ஏற்கனவே கூறி இருந்தார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பிரதமர் மோடி கேரளா வரும்போது அவரை சந்திக்க நேரம் வாங்கி தரும்படி பந்தளம் ராஜகுடும்பத்தினர் பா.ஜனதா கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டுள்ளனர்.
அவர்களும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி கேரள பயணத்தை முடித்துக்கொண்டு 27-ந்தேதி மாலை கொச்சியில் இருந்து டெல்லி திரும்ப உள்ளார். அப்போது பிரதமர் மோடியை பந்தளம் ராஜ குடும்பத்தினர் சந்தித்து பேச ஏற்பாடு நடந்து வருகிறது.
இதற்கிடையே பிரதமர் மோடி கேரள சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி திரும்பும் முன்பு முதல்-மந்திரி பினராயி விஜயனையும் சந்தித்து பேச உள்ளார்.