கேரளாவில் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கிய தென் மேற்கு பருவமழை தற்போது மிக தீவிரம் அடைந்துள்ளது.
கடந்த 5 நாட்களுக்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் கேரள மாநிலமே மழை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. கடந்த சில நாட்களாக இடை விடாது மழை கொட்டித் தீர்ப்பதால் மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது. மலப்புரம், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்கள் நிலச்சரிவு காரணமாக பெரும் அழிவை சந்தித்து உள்ளது. இந்த மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை நீடித்து வருவதால் நிலச்சரிவும் அதிகரித்து வருகிறது.
வயநாடு மாவட்டம் புத்து மலை மற்றும் மலப்புரம் மாவட்டம் கவளப்பாறையில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மண்ணில் புதைந்துவிட்டன. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் மீட்புப்பணியிலும் தொய்வு ஏற்பட்டு உள்ளது.
தேசிய மீட்புப்படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். கவளப்பாறையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 63 பேர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்த பகுதியில் இருந்து இதுவரை 8 பேர் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.
அதேப்போல வயநாடு மாவட்டம் புத்துமலையில் ஏற்பட்ட நிலச்சரிவிலும் 18 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பகுதியில் இருந்து இதுவரை 9 பேர் உடல் மீட்கப்பட்டு உள்ளது.
இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களிலும் நிலச்சரிவு காரணமாக ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன. இடைவிடாமல் தொடர்ந்து கனமழை பெய்ததே நிலச்சரிவுக்கு காரணம் ஆகும்.
மலப்புரம், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு ஆகிய 4 மாவட்டங்களிலும் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டு உள்ளது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்து உள்ளதால் அவர்களது கதி என்ன? என்பது உடனடியாக தெரியவில்லை. தேசிய பேரிடர் தடுப்பு படையினர், தீயணைப்பு படையினர் உள்பட அனைத்து மீட்புபடைகளும் இந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
கடந்த 3 நாட்களில் மட்டும் மாநிலம் முழுவதும் பெய்த மழைக்கு 64 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று மட்டும் கோழிக்கோடு மாவட்டத்தில் 4 பேரும், கண்ணூரில் 3 பேரும், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம் ஆகிய மவட்டங்களில் தலா ஒரு வரும் பலியாகி உள்ளனர். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் மாயமாகி உள்ளனர்.
கேரள மாநிலத்தில் அதிகபட்சமாக பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரில் மட்டும் ஒரே நாளில் 40 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளது. அதேப்போல ஒற்றப்பாலம் என்ற இடத்தில் 33 சென்டி மீட்டர் மழையும், வடகரை, மண்ணாற்றுக்காடு ஆகிய இடங்களில் தலா 30 சென்டி மீட்டரும், அம்பலவயல் பகுதியில் 26 சென்டி மீட்டரும், வைத்திரி 29 சென்டி மீட்டரும் மழை பெய்து உள்ளது.
மேலும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதனால் கேரள மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். வயநாடு மாவட்டத்தில் உள்ள பானசுராசாகர் அணை நேற்று திறக்கப்பட்டது. இதனால் கபினி நதி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருவதால் இந்த அணைகளும் எந்த நேரத்திலும் திறக்கப்படலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.
மாநிலம் முழுவதும் 1221 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த முகாம்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தஞ்சமடைந்து உள்ளனர். இவர்களுக்கு தேவையான உணவு உள்பட அனைத்து அடிப்படை வசதிகளும் மாநில அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் தவிக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்களும் போடப்பட்டு வருகிறது.
நிலச்சரிவு, ஆறுகளில் வெள்ளம், மரங்கள் வேரோடு சாய்ந்தது போன்ற காரணங்களால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போக்கு வரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த இடங்களுக்கு கூடுதல் மீட்புபடையினர் அனுப்பப்பட்டு நிலைமையை இயல்புக்கு கொண்டு வரும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது மழை சற்று குறைந்து உள்ளதால் மீட்புப்பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
வெள்ள சேத பாதிப்புக் குறித்து முதல்-மந்திரி பினராய் விஜயன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்த ஆண்டு மழை வெள்ளச்சேதத்தால் கேரளாவின் வட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மழை வெள்ளத்தில் 2303 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 198 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது. இன்று சற்று மழை ஓய்ந்து உள்ளதால் மீட்பு பணி துரிதப்படுத்தப்படும் என்றார்.