கேரளா உள்ளாட்சி தேர்தல் – 2ம் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டை, ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 395 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 6911 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. 72.67 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில் இன்று 2ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு மற்றும் வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில், 451 உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 8116 வார்டுகளில் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்த தேர்தலில் கொரோனா கட்டுப்பாடு விதிகள் முறையாக பின்பற்றப்படும் என்றும் வாக்காளர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து, தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 12,643 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் முறைகேடுகளை தடுப்பதற்காக, பதற்றம் நிறைந்த 473 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வெப்கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
3-வது கட்டமாக மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 14ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.