அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உச்சநீதிமன்ற ஆணையின்படி, பேபி அணையை பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏதுவாக கேரள மாநில வனப்பகுதியில் மரங்களை வெட்டவும், அணுகு சாலையில் பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்ளவும் கேரள அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக மரங்களை வெட்டுதல் மற்றும் அணுகு சாலையை சரிசெய்தல் ஆகிய பணிகளை மேற் கொள்வதற்கான அனுமதியை அளிப்பதில் கேரள அரசு காலந்தாழ்த்தி வருகிறது.
தற்போதுள்ள நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு செல்ல வேண்டுமென்றால் படகு மூலமாகத்தான் செல்ல வேண்டும். பேபி அணையை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென்றால் ஐந்து கிலோ மீட்டர் நீளமுள்ள வல்லக்கடவு முல்லைப் பெரியாறு அணை மலைச் சாலையை சரி செய்த பின் அந்தச் சாலை வழியாக கட்டு மானத்திற்குத் தேவையான பொருட்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில் கேரள அரசு செயல்படுவதன் காரணமாக அணுகு சாலையை சரி செய்யவோ அல்லது அங்குள்ள மரங்களை வெட்டவோ முடியாத சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.
உண்மை நிலை இவ்வாறிருக்க, அணையின் ஒட்டு மொத்த பாதுகாப்பு மற்றும் அதனுடைய கட்ட மைப்புகள் திருப்திகரமாக இருப்பதாகத் தெரிவித்துவிட்டு, அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய நீர்வள ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை அவமதிக்கும் கேரள அரசின் நடவடிக்கையை சுட்டிக் காட்டி உச்சநீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப் படுத்தத் தேவையான நடவடிக்கையை எடுக்கும் வகையில் மனுத்தாக்கல் செய்யாமல், அதை முற்றிலுமாக புறந் தள்ளிவிட்டு, முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் மனுத்தாக்கல் செய்திருப்பது நியாயமற்றது.
மத்திய நீர்வள ஆணையத்தின் மனுத்தாக்கலை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு உண்டு.
எனவே, முதல-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மத்தியநீர்வள ஆணையத்தின் அறிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும், பேபி அணை மற்றும் அணைப் பகுதிகளை வலுப்படுத்தும் வகையில் மரங்களை வெட்டவும், அணுகு சாலையை சரி செய்யவும் அனுமதி வழங்குமாறு கேரள அரசிற்கு உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசின் சார்பில் திறமையான வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.