கேரளாவில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
கேரளாவில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கேரளாவில் ஆலப்புழா, பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களில் வருகிற 22-ந்தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
இதையடுத்து இந்த 9 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் வெள்ளத்தின் அளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஆற்றில் குளிக்கும் பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதனால் சாலைகளில் மண் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபோல வயநாட்டில் பல இடங்களில் பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியதால் மக்கள் அவதிக்கு ஆளானார்கள்.