X

கேரளாவில் 3 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டிருந்த சூறாவளி தற்போது கேரளா நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு பெய்யும் என்று கூறப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக கேரளாவில் உள்ள பாலக்காடு, திருச்சூர், மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

இதுபோல கேரள கடல் பகுதியிலும் சூறைக்காற்று வீசும் எனவும் வானிலை மையம் எச்சரித்து உள்ளது.

குறிப்பாக தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் கூறப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

கேரளாவில் தொடர்ந்து மழை பெய்யும் என கூறப்பட்டு உள்ளதால் அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மலையோர கிராமங்களுக்கு மக்கள் இரவு நேரங்களில் செல்ல வேண்டாம் எனவும் பேரிடர் மீட்பு துறையினர் கூறியுள்ளனர்.