Tamilசெய்திகள்

கேரளாவில் 18 நாட்கள், உ.பியில் 2 நாட்கள் – ராகுல் காந்தியின் பாதயாத்திரையை விமர்சித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடத்தும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி விமர்சித்து உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், கேரள மாநிலத்தில் 18 நாட்கள், உத்தரபிரதேசத்தில் 2 நாட்கள் மட்டுமே ராகுல்காந்தியின் பாதயாத்திரை நடக்கிறது. ஏனெனில் உத்தரபிரதேசத்தில், பா.ஜனதா-ஆர்.எஸ்.எஸ். அமைப்பை எதிர்கொள்ள காங்கிரசுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இது பாரத ஒற்றுமை நடைபயணமா? அல்லது தேர்தலில் சீட் பெறுவதற்கான பிரசார நடைபயணமா? என்று தெரியவில்லை என குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் உத்தரபிரதேசம், கேரள மாநில வரைபடங்களும், ராகுல் காந்தியின் கேலிச்சித்திரமும் பதிவில் இடம் பெற்றுள்ளது. இதில் உத்தரபிரதேசத்தை விட கேரளம் சிறிய மாநிலம் என்பதை உணர்த்தும் வகையில் சித்தரித்து காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தகவல் தொடர்புத்துறை பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், இந்த யாத்திரை எப்படி திட்டமிடப்பட்டது என்பதை கம்யூனிஸ்டுகள் புரிந்து கொள்ளவில்லை. பாரதிய ஜனதாவின் மாற்று அணியாகத் திகழ்பவர்கள் இதுபோன்று அர்த்தமின்றி பேசிக்கொண்டு தான் இருப்பார்கள் என்றார்.