Tamilசெய்திகள்

கேரளாவில் வந்தே பாரத் ரெயில் ஓட தொடங்கி 6 நாட்களில் ரூ.2.7 கோடி வருவாய் – ரெயில்வே துறை அறிவிப்பு

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடுக்கு முதல் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டது. பிரதமர் மோடி கடந்த மாதம் 25-ந் தேதி இந்த ரெயிலை திருவனந்தபுரத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

28-ந் தேதி முதல் இந்த ரெயில் வணிக ரீதியிலான சேவையை தொடங்கியது. அன்று முதல் கடந்த 3-ந் தேதி வரை முதல் 6 நாட்களில் மட்டும் இந்த ரெயில் மூலம் ரூ.2.7 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரையிலான பயணத்தின் மூலம் ரூ.1.17 கோடியும், திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான பயணம் மூலம் ரூ.1.10 கோடியும் கிடைத்துள்ளது. இந்த ரெயிலின் எக்ஸ்கியூட்டிவ் இருக்கையில் பயணம் செய்யவே பயணிகள் அதிகம் விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரெயிலில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை சாதாரண இருக்கை வசதியில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணம் ரூ.1590. இதுவே எக்ஸ்கியூட்டிவ் வகுப்பில் பயணம் செய்ய ரூ.2880. வந்தே பாரத் ரெயிலில் 1128 இருக்கைகள் உள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கிய நாள் முதல் அனைத்து டிக்கெட்டுகளும் உடனுக்குடன் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 14-ந் தேதி வரை அனைத்து டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.