கேரளாவில் மேலும் 47 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி!
கேரளாவில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் நர்சு உள்பட 7 பேர் பலியானார்கள். அதன் பிறகு நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த ஆண்டும் கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவியது. கொச்சியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிறகே இதுபற்றி தெரிய வந்தது. தற்போது அந்த மாணவர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த மாணவருடன் நெருங்கி பழகியவர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் என்று 330 பேரை மருத்துவ அதிகாரிகள் தங்களது கண்காணிப்பில் கொண்டு வந்தனர்.
அவர்களுக்கு நிபா வைரஸ் பரவி இருக்கிறதா? என்பதை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி அவர்களது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரத்த பரிசோதனை முடிவுகள் வெளியானதில் 47 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 47 பேரும் உடனடியாக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் மற்றவர்களுக்கும் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அவர்களுக்கு டாக்டர்கள் தகுந்த அறிவுரைகள் வழங்கி உள்ளனர். அவர்களும் தொடர்ந்து டாக்டர்களின் கண்காணிப்பில் உள்ளனர். இதுபற்றி கொச்சி மாவட்ட கலெக்டர் முகமது சபீருல்லா கூறியதாவது:-
கொச்சி மாவட்டம் முழுவதும் நிபா வைரஸ் காய்ச்சல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி யாருக்கும் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியை அணுகும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மருத்துவ துறை அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள் இணைந்து நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது நிபா வைரஸ் கட்டுக்குள் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில் நோயியல் வல்லுனர்கள் குழுவும் கேரளாவுக்கு வந்துள்ளது. இந்த குழுவில் உள்ளவர்கள் நோய் பாதிப்பு உள்ள பகுதிகளில் வசிக்கும் வவ்வால்களை பிடித்து அதன் ரத்தத்தை பரிசோதனை செய்து வருகிறார்கள். வவ்வால், அணில் போன்றவை கடித்து போட்ட பழங்களையும் சேகரித்து நிபா வைரஸ் பரவுவது பற்றி கண்டறிந்து வருகிறார்கள்.