நாட்டிலேயே அதிக அளவிளாக கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் இந்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது இரண்டு ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்நிலையில், மாநிலத்தில் இதுவரை 2,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 300 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் இறந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8 மணி வரை நாடு முழுவதும் பதிவான 358 பாதிப்பில், 300 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதனால், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,341 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் பதிவான மூன்று இறப்புகளுடன், கடந்த கால கொரோனா தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 72,059 ஐ எட்டியுள்ளது.
நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்ட கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 211ஆக உள்ளது. கொரோனா தொற்று குறித்து, மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் கூறுகையில், “கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள போதிலும், தொற்றை கையாள மருத்துவமனைகள் தயார் நிலையில் இருப்பதால் யாரும் அச்சப்பட வேண்டாம்” என தெரிவித்துள்ளார்.