கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் 2 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் இறந்ததற்கு காரணம் நிபா வைரஸ் தொற்று இருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த நிபா வைரஸ் தொற்று காரணமாக, இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை மருத்துவக் குழு கண்காணித்து வருகிறது. இருவரும் உயிரிழந்ததற்கு நிபா வைரஸ் தான் காரணம் என்பதை உறுதி செய்யும் வரை காத்திருக்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில், கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாகவும், சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பேஸ்புக் பக்கத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இறந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவனமாக இருப்பது நிலைமையைச் சமாளிக்கத் தேவையான வழியாகும். சுகாதாரத்துறை தயாரித்துள்ள செயல் திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
கேரளாவில் நிபா வைரஸ் முதன் முதலாக கடந்த 2018-ம் ஆண்டு பதிவானது. அப்போது கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டத்தில் 17 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.