கேரளாவில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கினாலும் ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் இருந்து வெளுத்து வாங்கியது.
பலத்த மழை காரணமாக கேரளாவின் மலப்புரம், வயநாடு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. கவளப்பாறை, புத்துமலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.
இதுபோல பல்வேறு இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. இங்கு தங்கியிருந்த மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்ச மடைந்துள்ளனர்.
ஆகஸ்டு மாதம் இறுதியில் மழையின் தாக்கம் சற்று குறைந்தது. இதனால் நிவாரண பணிகள் வேகமாக நடந்தன. இந்த நிலையில் இம்மாதம் ஆரம்பம் முதல் மீண்டும் மழை வலுத்துள்ளது.
மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. பல இடங்களில் போக்குவரத்தும் முடங்கியது.
இந்த நிலையில் வங்கக்கடலில் கேரளா, கர்நாடகா கடற்கரை பகுதியில் குறைந்த காற்றழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கேரள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்தம் காரணமாக கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக கனமழை பெய்யுமென்று எச்சரித்துள்ளது. இதன் காரணமாக எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு நாளையும், கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு நாளை மறுநாளும் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழை காரணமாக கடலிலும் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரள கடலோர கிராமங்களில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கேரளாவில் பெய்யும் மழை காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக திருவனந்தபுரம் வானிலை மையம் தெரிவித்துள்ளது.