கேரளாவில் இந்த ஆண்டு ஜூன் முதல் வாரம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனாலும் ஆகஸ்ட் மாதம் தான் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது.
இதன் காரணமாக கேரளாவில் பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மலப்புரம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண முகாம்களும் திறக்கப்பட்டது. வீடுகளை இழந்த மக்கள் அங்கு தஞ்சமடைந்து உள்ளனர். சில மாவட்டங்களில் மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பி வருவதால் முகாம்களில் தங்கி உள்ள மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பியவண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் உள்ள 10 மாவட்டங்களுக்கு மீண்டும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு, எர்ணாகுளம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
இந்த 10 மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது. இதேப் போல நாளை ஆலப்புழா, இடுக்கி, கண்ணூர், காசர் கோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கும் ‘மஞ்சள் அலர்ட்’ விடப்பட்டு உள்ளது.
மழையின்போது பலத்த காற்று வீசும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.