கேரளாவில் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 38 பேர்கள் பலி!
கேரளாவில் தென்மேற்கு பருவ மழை காலத்தில் தான் அதிக மழை பொழிவு இருக்கும்.
தென்மேற்கு பருவமழை ஆகஸ்டு மாதம் இறுதியில் முடிவடைய வேண்டும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க வேண்டும். ஆனால் இன்னும் தென்மேற்கு பருவமழை முடிவடையாத நிலையில் அங்கு அரபிக்கடலில் கடந்த வாரம் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.
இந்த புயல் சின்னம் காரணமாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்தது. மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.
இதில் கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மலையோர கிராமங்களில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது.
கோட்டயம் கூட்டிங்கல் பகுதி மற்றும் இடுக்கி மாவட்டத்தின் கோக்கையார் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமான வீடுகள் சரிந்தன. இதில் வீடுகளில் வசித்த பலர் உயிரோடு மண்ணில் புதைந்தனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடற்படை வீரர்கள் மற்றும் மாநில மீட்பு குழுவினர் முகாமிட்டு மண்ணில் புதைந்தவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் கோட்டயம் மாவட்டம் குட்டிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பிளாப்பள்ளி, காவாலி பகுதிகளில் மட்டும் மண்ணில் புதைந்த 13 பேர் மீட்கப்பட்டனர். இவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்தபடி இருந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் மழை நீரில் இழுத்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருவரை காணவில்லை எனக்கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று மாநிலத்தின் உட்புற பகுதிகளிலும், நிலச்சரிவு ஏற்பட்ட கிராமங்களிலும் மழை சற்று குறைந்தது. இதனால் அங்கு மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு உள்ளூர் மக்களுடன் இணைந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதுபோல வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 184 முகாம்கள் அமைக்கப்பட்டன. இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கி உள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை வருவாய் துறையினர் செய்து வருகிறார்கள்.
மாநிலத்தின் உட்புற பகுதிகளில் மழை சற்று குறைந்தாலும், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தபடி உள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
கேரளாவின் பிரதான அணையான இடுக்கி அணைக்கு நேற்று முன்தினமே முதல் கட்ட அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று 2-வது கட்ட எச்சரிக்கையும், இரவில் 3-வது கட்ட ரெட் அலர்ட்டும் விடப்பட்டது.
இதுபோல காக்கி அணை, இடமலையார் அணை, சோலையாறு, மாட்டுப்பட்டி, மூழியாறு, குண்டலா, பேச்சி உள்பட 10 அணைகளின் நீர்மட்டமும் அபாய அளவை எட்டியது. இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். இதையடுத்து அணைகளுக்கு வரும் உபரி நீரை திறந்து விட முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று அதிகாலையில் இடமலையாறு அணையின் ஷட்டர்கள் திறக்கப்பட்டன. அடுத்து இடுக்கி அணையின் ஷட்டர்கள் பிற்பகலில் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து 10 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட உள்ளது.
அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவதால் கேரள ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பெய்த மழையால் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியாத நிலையில் இப்போது அணைகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுவதால் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
அச்சன்கோவில் நதிக்கரையையொட்டி உள்ள செரிக்கல், பூழிக்காடு, முடியூர்கோணம், குரம்பலா பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாத நிலையில் அணைகள் திறக்கப்பட்டால் இந்த பகுதிகளில் மேலும் வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பம்பை நதி உள்பட முக்கிய நதிகளிலும் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் வருகிற 24-ந் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனக்கூறப்பட்டுள்ளதால் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோல கேரளாவில் கல்லூரிகள் திறப்பும் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. முதல் மந்திரி பினராயி விஜயன் மழை வெள்ளச்சேதங்கள் குறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் அங்கு எடுக்கப்பட வேண்டிய நிவாரண நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டுள்ளார்.