நாட்டின் 17-வது மக்களவையின் பதவிக்காலம் வருகிற 2024-ம் ஆண்டு ஜூன் 16-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அனைத்து கட்சிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. பல கட்சிகள் தற்போதே கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்கிவிட்டன. இருந்தபோதிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகே அனைத்து கட்சிகளின் கூட்டணி விவரம் முடிவு செய்யப்படும்.
இந்நிலையில் கேரள மாநிலத்தில் மக்களளை தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சி தயாராக தொடங்கி விட்டது. இதற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் அடுத்தடுத்து கேரளா செல்ல உள்ளனர். கேரளாவில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் செயலக அணிவகுப்பு பேரணி வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. அதனை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தொடங்கி வைக்கிறார்.
தற்போதைய இடதுசாரி அரசின் ஊழலை கண்டித்தும், கருவண்ணூர் வங்கி மோசடி வழக்கில் நீதி கேட்டும் இந்த அணிவகுப்பு பேரணி நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாநில அளவிலான ஜனஜாகரண யாத்திரை டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. அதனை தொடங்கிவைக்க மத்திய மந்திரி அமித்ஷா டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் கேரளாவுக்கு வருகிறார். அப்போது திருவனந்தபுரத்தில் நடக்கும் ஒரு பெரிய பேரணியிலும் அமித்ஷா கலந்துகொண்டு பேசுகிறார்.
டிசம்பர் மாதம் நடக்கும் யாத்திரை திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை நடைபெறுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகள் வழியாக செல்லும் இந்த யாத்திரையில் 25 ஆயிரம் பேர் வரை பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த யாத்திரையில் முக்கிய இடங்களில் வரவேற்பு கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளனர். அந்த கூட்டங்களில் மத்திய தலைவர்கள் பலரும் பங்கேற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி கருவண்ணூர் வங்கி மோசடி என கேரள மாநிலத்தில் தற்போது நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நவம்பர் 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை மாநிலம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் மையங்களில் மாலைநேர கூட்டங்கள் நடத்தவும் பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.