கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற 26-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், 20 தொகுதிகளிலும் 169 ஆண்கள், 25 பெண்கள் என மொத்தம் 194 பேர் போட்டியிடுகின்றனர்.
பெரும்பாலான தொகுதிகளில் மும்முனைப்போட்டி நிலவிவரும் நிலையில், அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் களத்தில் இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
கேரள மாநிலத்தை பொறுத்தவரை தற்போது 19 மக்களவை தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணியின் வசம் இருக்கிறது. அதேபோன்று தற்போதைய தேர்தலிலும் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி விட வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் பெரும்பாலான தொகுதிகளை கைப்பற்றி கேரளாவில் கால் பதிந்துவிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பணியாற்றி வருகிறது. இதனால் பாரதிய ஜனதா சார்பில் பிரபலங்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டு இருக்கின்றனர்.
காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்கள் தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட பல்வேறு கட்சி தலைவர்களும் கேரளாவுக்கு வர தொடங்கி இருக்கின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி கேரளாவுக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட மீண்டும் கேரளாவுக்கு வருகிறார். வருகிற 15-ந்தேதி அட்டிங்கல், ஆலத்தூர், திருச்சூர் தொகுதிகளில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதே தினத்தில் ராகுல் காந்தியும் கேரளாவில் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அவர் 15-ந்தேதி மாலை கோழிக்கோட்டில் நடைபெறும் அரசியலமைப்பு பாதுகாப்பு பேரணியில் பங்கேற்று தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்தி ஆகிய இருவரும் ஒரே நாளில் கேரளாவில் போட்டி பிரசாரம் செய்கின்றனர். இதனால் பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் கேரள மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் வர இருக்கின்றனர். கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவகுமார் வருகிற 16-ந்தேதி கண்ணூரில் பிரசாரம் செய்கிறார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா, தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, சச்சின் பைலட் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய உள்ளனர். பாரதிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மகாராஷ்டிர மாநில துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், பிரமோத் சாவந்த், அனுராக் சிங் தாகூர் ஆகியோர் கோழிக்கோட்டிலும், புருஷோத்தம் ரூபாலா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் ஆலப்புழாவிலும், மீனாட்சி லேகி வயநாடு, இடுக்கி மற்றும் எர்ணாகுளத்திலும், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திருவனந்தபுரம் மற்றும் கொல்லத்திலும் பிரசாரம் செய்கிறார்கள்.
மேலும் பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய கேரளா வருகிறார்கள். இடதுசாரி ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி 16-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார். அவர் காசர்கோடு, கண்ணூர், வடகரா, கோழிக்கோடு, பாலக்காடு, ஆலத்தூர், சாலக்குடி, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கொல்லம் அட்டிங்கல் மற்றும் திருவனந்தபுரத்தில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், சுபாசினி அலி ஆகியோர் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும், பிருந்தா காரத் வருகிற 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரையிலும் பிரசாரம் செய்கின்றனர். இதேபோன்று பல்வேறு தலைவர்களும் கேரளாவில் பிரசாரம் செய்ய உள்ளனர்.