X

கேரளாவில் நடந்த படகு போட்டி – பள்ளத்துருத்தி படகு சங்கம் வெற்றி

கேரளாவில் நடைபெறும் வருடாந்திர படகுப் போட்டிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றது. ஆலப்புழா மாவட்டம் புன்னமடா ஏரியில் நேற்று 68-வது நேரு கோப்பைக்கான படகுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை அந்தமான் நிகோபார் தீவு துணை நிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 20 பாம்பு படகுகள் உள்பட 77 படகுகள் பங்கேற்றன. 150 அடி நீளமுள்ள பாம்பு படகு ஒன்று சுமார் 100 துடுப்பு வீரர்களால் இயக்கப்பட்டது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பள்ளத்துருத்தி படகு சங்கத்தை சேர்ந்த படகு 1.15 கி.மீ.பந்தய தூரத்தை 4.30 நிமிடங்களில் கடந்தது. இதையடுத்து மூன்றாவது முறையாக அந்த சங்கத்தை சேர்ந்த துடுப்பு வீரர்கள் நேரு கோப்பையை கைப்பற்றினர். இதையடுத்து அவர்கள் கொண்டாட்டங்கள் ஈடுபட்டனர். வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பார்வையாளர்கள் இந்த படகு போட்டியை கண்டு ரசித்தனர்.